13
சனங்களுக்கு நீ எழுதும்
கவிதைகள் பற்றி
சனங்களுக்கே அக்கறை இல்லை
போலிருக்கிறது.
அவர்கள் பாட்டுக்கு
மண்வெட்டுகிறார்கள்,
கல் சுமக்கிறார்கள்,
மூட்டைத் தூக்குகிறார்கள்,
நடுகிறார்கள், அறுக்கிறார்கள்.
நீ உன் கவிதையில் அவர்களுக்கான
வெளிச்சத்தையும் விடியலையும்
(வெளிச்ச விடியல் எனலாமா)
ஒளித்து வைத்திருப்பதை
அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
என்ன சனங்கள் இவர்கள்?
போகட்டும் போ,
நீ மட்டும் கவிதை செய்வதை
நிறுத்திவிடாதே,
உனக்கே அலுத்துப்போகும் வரை.
14
உனக்குச் சின்னதாகக்
கொம்பு முளைத்திருக்கிறது.
தலையைச்சற்றி மங்கலாக
ஒளிவட்டம்.
உதட்டில் அலட்சியப் புன்னகை
ஒட்டிக் கொண்டிருக்கிறது.
முகத்தில் புதிய தேஜஸ்
குடியேறியிருக்கிறது.
நடையில் ஒரு திமிர்த்தனம்.
'அதோ, போகிறாரே அவர்தான்'
ஜனங்கள் உன்னைச் சுட்டிப் பேசுகிறார்கள்.
நீ எழுதி அனுப்பிய
'ஜோக்' ஒன்று
வார இதழில் நேற்றுதான்
கவிதையென வெளிவந்திருந்தது.
15
இறைச்சிக் கடையின்
கூரையில் அமர்ந்து
கழித்தெறியப்படும் மிச்சங்களுக்காகக்
காத்துக்கிடக்கிறது காகம்.
சம்பவங்களுக்காக நீ.
சுனாமி, கும்பகோணம் தீ என
வருடத்திற்கு இரண்டு மூன்று
நடந்துவிடுகிறது
நீ,
சந்தோசமாகக் கவிதை செய்ய
அமர்ந்து விடுகிறாய்.
முதுகில் வேறு தட்டிக் கொடுத்துக்
கொள்கிறாய்
என்ன. . . எளவுடா இது!
No comments:
Post a Comment