ஜோக் எழுத்தாளர்கள் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு சமாச்சாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். ஜோக்காக எழுதி எழுதிக் குவிப்பார்கள். பத்திரிக்கைகளும் வாரா வாரம் அலுத்துக்காமல் வெளியிட, வாசகர்களும் சலிச்சுக்காமல் படித்துப் படித்துச் சிரிப்பார்கள். ஒரு சமயம் வீட்டு வேலை செய்யும் பெண்கள், அப்புறம் போலீஸ்காரர்கள், கபாலிகள், நர்ஸ்கள், டாக்டர்கள், தலைவர்கள். இப்போ மன்னர்கள் நாளை என்னவோ? அதுபோல ஆயிற்று, கவிதை பண்ணுதலும். கவிதைக்காரர்களிடம் குழந்தைகள் இப்போது வசமாகச் சிக்கிக்கொண்டார்கள்.
“குழந்தை தூங்கிவிட்டது
விளையாடத் துணையின்றி
பொம்மை அழுதுகொண்டிருக்கிறது.”
“குழந்தை ஒன்னுக்கிருந்தது
பெருமையில்,
சிலிர்த்துக் கொண்டது
தரை.”
- ஒன்னும் பண்ணமுடியாது.
குழந்தையுடன் வண்ணத்துப்பூச்சியையோ, மூட்டைப்பூச்சியையோ இணைக்கக் கவிதை கூடுதல் கனமும் கவனமும் பெறும். நம்மப் பங்குக்கு நாமும் ஒரு குழந்தைக்கவிதை பண்ணி வெச்சுக்கலாம், எப்பவாவது பயன்படும் என்று ... ஒரு நப்பாசைதான்.
“குழந்தை தானாக
நடக்கத் துவங்கியது,
குடும்பமே குதூகலத்தில்.
நடைவண்டி மாத்திரம்
மூலையில், குப்புறக் கவிழ்ந்து
அழுது கொண்டிருந்தது.”
- எப்பூடி...
வாசகனை பயமுறுத்தும் மாந்ரீகர்கள்
“இயவுளின் உருமாற்றத்திற்கான புலனுணர்வுச் சான்றுகளை இறையியல் விஞ்ஞானிகள் குறுந்தகடுகளில் தேடிக் கொண்டிருக்க சமாந்தரமான நெடுக் கோடிகளைக் குறிப்பதற்கென வேறுபட்ட இயவுளரின் வகை மாதிரிகளால் காட்டப்படும் உருமாற்றம் சமாந்தரமாக மாம்பழவெளவால் உமிழும் ஒலிக்குறிப்பினால் நிழற்றப்படுகிறது. அதிகார நெடுக்கோடிகளாக இயவுகளின் உருமாற்ற தகவலினால் எதிர்நோக்கப்படும் உடனடி விளைவுகளில் 1. நீர்மண் கணத்தில் வனைவுப் பாய்மம் தெறிப்படைதல் 2. துகள் பிரிகையின் சரிவு 3. மூலவுருவப் பல்வகை அருகல். 4. புனைகளம் வெளியேற்றப் படல் 5. ஒளியை வடிகட்டும் படலம் எனும் ஐந்தும் தம்மளவில் இரைகவ்வக்கூடிய வடிவமைப் புள்ள நாக்குகளாக எலிமீசைகளை நோக்கி அலைவுறுகின்றன சுழன்று”
- பயப்படாதீங்க.
இது, ஒரு சிறுகதையின் முதல்வரி மற்றும் பத்தி. மந்திரச்சிமிழ் காலண்டிதழில் இராகவன் என்பார் எழுதியது. இப்படியே இது மூன்றுபக்கம் செல்கிறது கதை?. என்ன சொல்கிறது ஆரம்பிக்கிறதா முடிகிறதா, தொடர்கிறதா என்று சாதாரண புத்தியுடைய என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. இதை புரிந்துகொள்ள தனித்த புத்தியுடையவர்களால் மாத்திரமே இயலும் என எண்ணுகிறேன். இந்தக் கதையினை வாசிக்கும் பேறுபெற்றோர் எவராகிலும் இருப்பின் புரிந்திருந்தால் தொடர்புகொள்க. அல்லது இப்படியான சிறுகதைகளில் உபயோகிக்கப்படும் சொற்களுக் கான அகராதி ஏதும் வெளியிடப்பட்டிருப்பின் அறியத்தருக. சாரபாலம் - ஸக்காலம் - சர்வம் - சங்கீதம்- தம்பாலடனம் - வணக்கம்.
அதிரற்க அரசு
அரசு, (குமுதம்) கேள்வி - பதில் பகுதியில் தான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்ததைக் குறித்து எழுதியுள்ளார். அதில், “எழுத்தாளர்களிடையே இத்தனைக் குழுக்களா என்று அதிர்ந்துபோனேன். கெட்டவார்த்தை களில் திட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று ஒப்பீடுசெய்கிறார்கள். நான் சென்றுவந்தது புத்தகக் கண்காட்சிக்குள் அல்ல, புத்தக அரசியலுக்குள். பாவம் வாசகர்கள்” என்று எழுதியுள்ளார்.
அதிரற்க அரசு, எழுத்தாளனா ஆவுறது அவ்வளவு சுலபமில்ல. அதிலும் நல்ல எழுத்தாளனா ஆவுறது... ரொம்பச்சிரமம். நீங்க எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு குரூப்புல உங்களை இணைச்சுக்கனும், அப்பறம் அந்த குரூப்ப உடைச்சி உங்களுக்கு உங்களுக்கேயான ஒரு குரூப்ப ஏற்படுத் திக்கனும். அப்புறம்தான் எழுதறதெல்லாம். உங்க எழுத்து இலக்கியத்தரம் மிக்கது என அங்கீகரிக்கப் படனும்னா குறைந்தப் பட்சம் ஒரு இருபத்தைந்து கெட்ட வார்த்தை களையாவது நீங்க தெரிஞ்சிகிட்டிருக்கனும் அவைகளை ஆங்காங்கே நீங்க எழுதற கவிதைகள்ல, கதைகள்ல தெளிச்சிவிடனும். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதங் காட்டியும் முன்ன, பேசற மாதிரி எழுதனும்னு ஆரம்பிச்சு இப்ப (அவங்க) எழுதற மாதிரி பேச ஆரம்பிச் சுட்டாங்க. அவ்வளவுதான்.
திதி கொடுத்து கட்டுப்படியாகல...
ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன், ஒரு இரண்டு மாதத்துக்காகிலும் இவுருக்கு எப்பிடி விருது கிடைக்கலாம்? அப்புடி என்ன எழுதி கிழிச்சுப்புட்டாரு?ன்னு ஆரம்பிச்சு, விருது வாங்கினவன நார்நாராக்கிழிச்சுத் தோரணம் கட்டித் தொங்க விட்டுவிடுவாங்க. அவுருக்கு எப்பிடி கொடுக்கப்போச்சுங்கிற கேள்வியில எனக்கு ஏன் கொடுக்க மாட்டேங்கிறாங்க அப்படிங்கிற ஆதங்கம் தொன்னாந்துகிட்டு நிக்கும்.
இப்படியான நிலைமை தமிழில் மட்டும் தானா எல்லா மொழிகளிலேயும் இருக்கான்னு தெரியல. ஆனாலும், ‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ங்கிறது சரிதானாங்கிறதப்பத்தி மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் எவரேனும் கொஞ்சம் ஆராய்ஞ்சு, பீராய்ஞ்சுப் பார்க்கலாம்... தப்பில்ல.
இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது காவல்கோட்டம் நாவலுக்காக சு.வெங்க-டேசனுக்கு கிடைச்சிருக்கு. (“வாழ்த்துக்கள் வெங்கடேசன்,” என்னை சு.வெக்குத் தெரியாது) ஜனவரி 2012 (101 வது இதழ்) உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் சு.வெவுக்கு விருது வழங்கப்பட்டது குறித்து உச்ச ஆவேசத்தில் பொங்கியுள்ளார். அவருடைய பொங்கல் சரிதானான்னு பார்ப்போம்.
இனி மனுஷ்யபுத்திரன்... (அடைப்புக்குள் நான்)
“வருடாவருடம் சாகித்ய அகாதமி விருதை விமரிசிச்சு எழுதுவது என்பது செத்தவர்களுக்கு திதி கொடுப்பது போல ஆகிவிட்டது. எந்த வருடமும் நாம் அதிலிருந்து தவற முடியாது போலிருக்கிறது” (சிரமம்தான்).
“சாகித்ய அகாதமி இதுவரை மூன்று விதமான விருதுகளை வழங்கி வந்திருக்கிறது” (மூன்று விதமானவா? மூன்று விதமாகவா?)
“முதலாவது ஒரு மோசமான எழுத்தாளரின் மோசமான புத்தகத்திற்கு விருது வழங்குவது, இரண்டாவதாக ஒரு நல்ல எழுத்தாளரின் மோசமான புத்தகத்திற்கு விருது வழங்குவது, மூன்றாவதாக அப்படி ஒரு எழுத்தாளர் இருந்தார் என நமக்கு நினைவூட்டும் விதமாக ஒரு எழுத்தாளரைக் கண்டு பிடித்து அவருக்கு விருது வழங்குவது. இப்போது, நான்காவதாக ஒரு வகை மாதிரியை அது உருவாக்கி யிருக்கிறது. தமிழில் எந்த முக்கியத்துவமும் பெறாத ஓர் இளம் எழுத்தாளரின் புத்தகத்தைக் கண்டுபிடித்து, அதற்கு விருது வழங்குவது என்பதுதான் அது.” (முக்கியத்துவம் பெற்ற எழுத்தாளனாக எந்த அளவு முக்க வேண்டும் என மனுஷ்யபுத்திரன்தான் சொல்ல வேண்டும் எழுதுபவன் இளம் ஆக இருக்கக்கூடாத, கிழம் ஆகத்தான் இருக்க வேண்டுமா என்பதையும், இளம் என்பதற்கு உச்சபட்ச வயது எவ்வளவு அனுமதிக்கப்படும் என்பதையும் கிழம் என மதிக்கப்பட குறைந்தபட்ச வயது என்ன என்பதையும், தலை நரைத்திருத்தல் என்பது கட்டாயமா? அப்படியானால் எத்தனை சதவீத நரை வேண்டும், தலை மட்டும் நரைத்திருந்தால் போதுமா? வயதுச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டுமா? என்பது குறித்தும் மனுஷ்யபுத்திரன் விளக்கினால் நலம்.)
“தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதுகளைக் கடந்த சில ஆண்டுகளில் பெரும் அவமானச் சின்னமாக மாற்றியதில் பெரும் பங்காற்றிய சிற்பி போன்றவர்களிடமும் இந்த ஆண்டு விருதுக்குழுவில் செயல்பட்ட வர்களிடமும் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கு ஏதாவது அறிவு நாணயம் இருக்கிறதா?” (கேக்குறார்ல... சொல்லுங்கப்பா...) “எப்போதாவது உங்கள் மனசாட்சியை நீங்கள் விழித்தெழ அனுமதிப்பீர் களா?” (ஒரே ஒரு கேள்வின்னுட்டு ரெண்டாவது கேள்வி கேக்குறாரு... தப்பா ஆடக்கூடாது) “தமிழில் மிகத்தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருக்கும் பல படைப்பாளிகளைத் தாண்டி இந்த விருதை வெங்கடேசனுக்கு வழங்கக்காரணமாக இருந்த உங்களது நிர்பந்தம் என்ன?” (என்னப்பா... அப்பிடி ஒரு நிர்பந்தம்... சொல்லுங்க... கடுப்பாவுதுல்ல) “வெளிப்படையாக இந்த விருதுக்கு ஒரு விலையை நிர்ணயுங்கள். இந்த விலையைச் செலுத்துபவர்களுக்குச் சாகித்ய அகாதமி என அறிவியுங்கள்” (ஏலமுறை சரியா இருக்குமா மனுஷ்யபுத்திரன் அவர்களே)
“தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளைத் தொடர்ந்து அவமதிக்கும் சாகித்ய அகாதமியின் விருதுக்கு எதிராக நாம் செய்யவேண்டிய இரண்டு வேலைகள் இருக்கின்றன.” (நாம்ன்னா யாருங் கண்ணா... மனுஷ்யபுத்திரன் மற்றும் உயிர்மை நிர்வாக ஆசிரியர், தயாரிப்புக்குழு, மற்றும் பலரா?)
”முதலாவதாக ஒவ்வொரு ஆண்டும் கள்ளத்தனமாக எடுக்கப்படும் இந்த விருது முடிவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவேண்டும்” (கள்ளத்தனம் என்பது என்ன திருட்டுத்தனம் தானே, திருட்டுத்தனம் திருடர்களால் நிகழ்த்தப்படுவது. அந்த விருதுக்குழுவில் உள்ளோர்க்கு சிறிதேனும் அறிவுநாணம் இருந்தால், இந்த ஆளு எங்களைக்குறித்து இவ்வாறு எழுதிவிட்டார், இத்தனை சதவீதம் எங்கள் மானம் நஷ்டப்பட்டு விட்டது, எனவே நஷ்டத்திற்கு இவ்வளவு ஈடு வேண்டும் என நீங்க கோர்ட்டுக்குப் போகலாம் தானே. அல்லது அவரது கூற்று உண்மை என ஒப்புக்கொள்வதாகி விடுமே. யாராச்சும் கோர்ட்டுக்குப் போங்கப்பா... நவீன கவிதைகளைப் படிச்சி மண்ட காய்ஞ்சு கிடக்குது. கோர்ட்டு, கேஸ், வாய்தா, முன்ஜாமீன், அப்பீல்... என பொழுது போவும்ல)
“இரண்டாவதாக சாகித்ய அகாதமி விருது ஒரு இலட்சம் என்றால் இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் நாம் ஒரு தமிழ் சாகித்ய அகாதமி விருதை நிறுவ வேண்டும் (சப்பாஷ் சரியான போட்டி) ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதமி ஒரு தவறான முடிவை அறிவிக்கும் அடுத்தநாள் (சுடச்சுட) நாம் யாருக்கு நியாயமாக அந்த ஆண்டு விருதை வழங்குவோமோ அவருக்கு வழங்குவோம்” (இரண்டு இலட்சத்துல விழா செலவு போக மீதியா அல்லது முழுசா ரண்டு இலட்சமுமா? இந்த தமிழ் சாகித்ய அகாதமி விருது பெறுவதற்கு நுழைவுக்கட்டணம் ஏதும் உண்டா... இருக்கனும்.... ஒரு எழுத்தாளரின் ஒரு படைப்புக்கு ரூபாய் ஐந்தாயிரம்னு வைச்சா ஒரு நூறு பேர் கலந்துகிட்டா நூழைவுக் கட்டணமே அஞ்சு லட்சம் தேறும். விருதுத்தொகை, விழாச்செலவுபோக கணிச மிச்சமும் இருக்கும்)
“சு.வெங்கடேசன் இந்த விருதைப்பெற்றுக் கொள்வதன் வாயிலாக தனது முக்கியமான சக படைப்பாளிகளையும் மூத்தப் படைப்பாளி களையும் இழிவு படுத்தும் சாகித்ய அகாதமியின் செயலில் பங்கெடுத்திருக்கிறார்” (உங்க மேலையும் கேஸ் பாயும்ங்கிறார்.)
(அன்புள்ள சு.வெ.வுக்கு, வணக்கம். பேசாம விருத திருப்பிக்கொடுத்திடுங்க ரொம்பகாலமா முக்கிக்கிடக்கிறவங்க கிழம் கட்டையயல்லாம் குறித்து கொஞ்சம் கருணையுடன் பரிசீலியுங்க)
மனுஷ்யபுத்திரன் இந்த அளவுக்கு பொங்கல் வைக்கிறதுக்கு காரணம் ஏதாவது இருக்காமப் போவாதுன்னு ஒரு பொறி தட்டிச்சு. காவல்கோட்டம் வாங்கிப்படிக்கிற அளவுக்குப் பொருளாதாரம் இடம் கொடுக்கல. ஆனா, போன ஆண்டு விருதுபெற்ற நாஞ்சில் நாடன் எழுதிய ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பு கிடைத்தது. மனுஷ்யபுத்திரன் பொங்கல்லையும் தப்பிலைன்னுதான் தோணுது. இந்தத் தொகுப்பு அவர் வகைப்படுத்தும் ஒரு நல்ல எழுத்தாளரின் மோசமான எழுத்துக்கு வழங்கப்பட்ட விருதுங்கிறதுல அடங்குது. அது என்னன்னு அடுத்த இதழில் பார்ப்போம்.
கருக்கல்-விடியும்
மார்ச்-2012
கவிதை இரண்டும் அருமை...
ReplyDeleteசாகித்ய அகாதமி விருது பற்றி விரிவான அலசல்...
நன்றி…
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?